கொரோனாவைக் கட்டுப்படுத்தக் கதவுகளை மூடியதால் கிவிப்பழங்களைப் புடுங்க ஆளில்லை, நியூசிலாந்தில்.
கொரோனாப் பரவுதலைக் கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்தி, நாட்டின் எல்லைகளை இறுக மூடிக் கட்டுப்படுத்தியதால் அதிக மரணங்கள் உண்டாகாமல் தடுத்து வெற்றி கொண்ட நாடாக நியூசிலாந்து கருதப்படுகிறது. சுமார் ஐந்து மில்லியன் சனத்தொகையுள்ள நியூசிலாந்தில் கொரோனாத் தொற்றுகளால் இறந்தவர்கள் 26 பேர் மட்டுமே.
நியூசிலாந்தின் மிக முக்கியமான வருமானம் தரும் பழத்தோட்டங்களின் வருமானம் இதனால் பெருமளவு பாதிக்கப்படுகிறது. அப்பிள், கிவி ஆகிய பழங்களி உற்பத்தி செய்யும் நாடு நியூசிலாந்து. அவைகளை ஏற்றுமதி செய்வதால் கிடைக்கும் வருமானம் நியூசிலாந்தின் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது.
அதிக சம்பளம் கிடைக்காத அந்தப் பழம் புடுங்கும் வேலைக்கு நியூசிலாந்து மக்கள் பொதுவாக வருவதில்லை. எனவே நாட்டுக்கு வெளியேயிருக்கும் பக்கத்துத் தீவுகளிலிருந்தே சுமார் 14,000 பழம்புடுங்கும் தொழிலாளர்கள் வருவிக்கப்படுகிறார்கள்.
கடந்த வருடத்தைப் போலவே இவ்வருடமும் அரசு அந்தத் தொழிலாளர்களுக்கான விசாக்களைக் கொடுக்க விரும்பவில்லை. கடந்த வருடம் இச்சமயத்தில் தோட்டக்காரர்கள் அரசிடம் வலிந்து கேட்டுக்கொண்டதால் சுமார் 2,000 தொழிலாளர்களுக்கான விசாக்கள் வழங்கப்பட்டன. அவர்கள் கொரோனாப் பரவலற்ற இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டு, குறிப்பிட்ட காலம் அங்கேயே இருந்து பழத்தோட்டங்களில் வேலை செய்தார்கள்.
கொரோனாத் தொற்றுக்களைக் கட்டுப்படுத்தும் சகல கட்டுப்பாடுகளுக்கும் ஒத்துக்கொண்டு, செலவுகள் அதிகமானாலும் தொழிலாளர்களைப் பக்கத்து நாடுகளிலிருந்து கொண்டுவர தோட்ட முதலாளிகள் தயாராக இருப்பினும் அரசு இதுவரை எவரையும் உள்ளே வரவிட மறுத்து வருகிறது.
இதனால் இவ்வருடம், மீண்டும் பல தோட்டங்களில் அப்பிள்களும், கிவி மற்றும் பழங்களும் அழுகிப்போகவிருக்கின்றன. அத்துடன் நியூசிலாந்து பழங்களை ஏற்றுமதிசெய்யும் ஒரு முக்கிய நாடாக இருப்பதால் அப்பழங்களுக்கு உலகில் தட்டுப்பாடும் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்