சாதாரண உணவுப்பண்டங்களின் விலை ஒரே வருடத்தில் 417 % லெபனானின் பெரும்பாலானோர் வறுமைக்கோட்டுக்குக் கீழே.
லெபனானின் ஆளும் வர்க்கத்தின் வெவ்வேறு தரப்பினரும் தத்தம் “தலைவர்களைத்” தொடர்ந்தும் தாங்கிப்பிடித்துக்கொண்டிருக்க நாடோ படு வேகமாகப் பாதாளத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. அரசியல், மதம், வர்த்தகம், பொருளாதாரம் அத்தனையையும் வெவ்வேறு குழுக்கள் தமது பிடிக்குள் வைத்துக்கொண்டிருந்த லெபனானின் இந்த வீழ்ச்சிக்காலம் 1980-களில் உள்நாட்டுப் போர்க்காலத்தை விட மோசமானதாக மாறிவிட்டிருக்கிறது.
மத, இனத் தலைவர்களில் யார் எதை ஆள்வது என்று பிரித்துக்கொண்டு ஆளும் ஆட்சியையே கண்டுவந்த லெபனானில் கடந்த சில வருடங்களாக எந்த ஒரு தலைவருமே ஆளமுடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. எவர் ஆள முற்பட்டாலும் எதிர்த்தரப்பார் அவரது தலைமையைக் குழிபறிக்க எதையும் செய்யத் தயாராகிவிடுகிறார்கள். பொறுமையிழந்து சில வருடங்களாகவே போராட்டங்களை ஆரம்பித்திருந்த மக்கள் சில மாதங்களாக மொத்தமாகவே வீதிக்கு வந்து தலைநகரின் பல பகுதிகளை இயங்காமல் செய்திருக்கிறார்கள். இயங்கக்கூடிய ஒரு அரசை அமைக்க லெபனானுக்கு உதவ முயன்ற வெளிநாட்டுத் தலைவர்களும் தங்களால் எதுவுமே செய்யமுடியாதென்று கைகழுவி விட்டார்கள்.
அரசியல் முடம், லஞ்ச ஊழல்கள், எல்லை நாடான சிரியாவில் நடக்கும் போர், கொரோனாப் பரவல்கள் என்று லெபனானின் தற்போதைய் பொருளாதார, சமூக வீழ்ச்சிக்குப் பல காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இவைகளெல்லாவற்றையும் கூர்தீட்டி ஒரேயடியில் நாட்டின் சமூக நிர்வாணத்தைக் காட்டிக்கொடுத்தது பெய்ரூட் துறைமுகத்தில் கடந்த ஆகஸ்ட்டில் நடந்த மிகப்பெரும் வெடிவிபத்து.
அத்துறைமுகத்தில் கவனிப்பாரற்றுக் கிடங்கொன்றில் வைக்கப்பட்டிருந்த சுமார் 3,000 அமோனியம் நைத்ரீட் என்ற இரசாயணம் தீவிபத்தொன்றால் பெரும் குண்டாக மாறி வெடித்து அப்பிராந்தியத்தையே சிதறடித்தது. அதனால் சுமார் 300,000 பேர் வீடிழக்க, 6,000 பேர் காயமடைய இறந்தவர்கள் சுமார் 215 பேராகும்.
தொடர்ந்தும் அந்தத் துறைமுகப் பிராந்தியம் இன்றுவரை எவராலும் சீந்தப்படாமல் கிடக்கிறது. அங்கே அந்த இரசாயணத்தை யார், எவருடைய அனுமதியுடன் வைத்திருந்தார்கள் என்ற கேள்விக்கு விடை தேடப்போன அரச நீதித்துறை அதன் வேர்கள் பிரதமர் வரை போவதைக் கண்டது. அதைத் தொடர்ந்து விசாரணையும் இழுபறியில் நிற்கிறது. துறைமுகத்தை யார் துப்பரவு செய்து சீராக்குவது என்பதைத் தீர்மானிக்கவே லெபனானால் முடியவில்லை. யாராவது வெளிநாட்டு நிறுவனங்கள் அத்துறைமுகத்தை வாங்கட்டும் என்ற எதிர்பார்ப்புடன் இடிபாடுகளுடன் அது கைவிடப்பட்டிருக்கிறது.
நாட்டின் பாதிப்பேருக்கு மேல் வறுமைக்கோட்டுக்குக் கீழ் தள்ளப்பட்டிருக்கிறார்கள். லெபனான் நாணயம் டொலருக்கெதிராக 2019 லிருந்து 85 % வீழ்ச்சியடைந்திருக்கிறது. நாட்டின் பணவீக்கமோ ஆகக்குறைந்தது 90 % ஆகியிருக்கிறது. புதிய பிரச்சினையாக எழுந்திருப்பது எரிநெய்த் தட்டுப்பாடு. நாட்டின் அரைவாசி எரிநெய் விநியோகக் கடைகள் மூடப்பட்டுவிட்டன. காரணம் பக்கத்து நாடான சிரியாவில் அது சமீபத்தில் 50% ஆல் விலையுயர்த்தப்படவே லெபனானிலிருந்து அதை விற்பதற்காகச் சிரியாவுக்குக் கடத்துகிறார்கள்.
அரசியல்வாதிகள் புதிய குற்றவாளியாக நாட்டின் மத்திய வங்கித் தலைவர் ரியாட் சலமேயைச் சாட்டுகிறார்கள். அவர் கடந்த வருடம் லெபனானின் வெளிநாட்டுக் கடனின் பகுதியைக் கொடுக்காதது, நாட்டின் பொருளாதாரத்தைக் காப்பாற்ற நடவடிக்கைகளெடுக்காதது தான் எல்லாவற்றுக்கும் காரணமென்று ஜனாதிபதி அவர்மீது குற்றஞ்சாட்டுகிறார். ரியாட் சலமேயும் அவரது சகோதரரும் சேர்ந்து லெபனானின் மத்திய வங்கியிலிருந்து சுவிஸ் வங்கிகளில் தமது பெயருக்கு 250 மில்லியன் எவ்ரோக்களை மாற்றியதாகத் தெரியவந்திருக்கிறது.
பல வெளிநாட்டு வங்கிகளும் லெபனானில் செயற்பட முடியாமல் தமது காரியாலயங்களை மூடிவிடுவதாகத் தெரிவிக்கின்றன. தற்போதைய நிலையில் லெபனானின் நிலைமையை எவருமே கட்டுப்படுத்த முயல்வதாகத் தெரியவில்லை.
சாள்ஸ் ஜெ போமன்