ஒத்தமான் சாம்ராஜ்யத்தில் கொல்லப்பட்ட ஆர்மீனியர்களை இனக்கொலை என்று ஜோ பைடன் அங்கீகரித்ததை வாபஸ் வாங்கச் சொல்லும் எர்டகான்.

இன்றைய துருக்கியை மையமாகக் கொண்டிருந்த ஒத்தமான் சாம்ராஜ்யத்தில் 1915 – 1917 ம் ஆண்டுகளுக்கிடையே கொல்லப்பட்ட சுமார் 1.5 மில்லியன் ஆர்மீனியர்களை “இன அழிப்பு” என்று அமெரிக்கா சனியன்று உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது. தொடர்ந்தும் அக்கொலைகள் போரில் ஏற்பட்டவை என்றே சாதித்து வரும் துருக்கி ஆர்மீனியர்கள் திட்டமிட்டு துருக்கியிலிருந்து விரட்டப்படவோ, கொல்லப்படவோ இல்லை என்று சொல்லி ஒற்றைக் காலில் நின்று வருகிறது. 

குறிப்பிட்ட வருடங்களில் ஆர்மீனியர்கள் வாழ்ந்த இடங்களை ஒத்தமானியப் படைகள் சுற்றி வளைத்து அவர்களை சிரியாவின் வரண்ட பிராந்தியங்களுக்கு விரட்டிச் சென்று கொத்துக் கொத்தாகக் கொன்றதாகப் பல சாட்சியங்கள் இருக்கின்றன. துருக்கியைப் பொறுத்தவரை போர்க்காலப் பசி பட்டிணியால் துருக்கர்களும் அச்சமயத்தில் இறந்தார்கள். ஆர்மீனியர்களின் இறப்பு சுமார் 300,000 என்பதாகும். 

பல ஐரோப்பிய, தென்னமெரிக்க நாடுகள், கனடா உட்பட சுமார் 30 நாடுகள் ஏற்கனவே ஆர்மீனிய இன அழிப்பை அங்கீகரித்திருக்கின்றன. அமெரிக்கா உட்பட உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் ஆர்மீனியர்களுக்கு அமெரிக்காவின் உத்தியோகபூர்வமான இந்த அறிவிப்பு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆர்மீனிய அரசும் ஜோ பைடனுக்கு இதற்காக நன்றி தெரிவித்திருக்கிறது.

ஆனால், நாட்டோ அமைப்பில் அமெரிக்காவுடன் இருந்துவரும் துருக்கி ஜோ பைடனின் முடிவைக் கண்டித்திருக்கிறது. ஏற்கனவே டிரம்ப் காலத்தில் அமெரிக்காவுடன் மோசமான உறவிலிருக்கும் துருக்கி இந்த அறிவிப்பால் மேலும் கோபமடைந்திருக்கிறது. 

“நூறு வருடங்களுக்கு முன்னர் எங்கள் நாட்டுச் சரித்திரத்தில் ஏற்பட்ட ஒரு கறை படிந்த அத்தியாயத்தைச் சுரண்டிப் பார்த்து அநியாயமான, வேதனையான முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இது எங்கள் உறவுகளுக்கு நல்லதல்ல,” என்று குறிப்பிட்டிருக்கும் எர்டகான் தனது பக்கத்து நாடான ஆர்மீனியாவுடன் தாம் சுமுகமாக இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார். 

ஜோ பைடன் ஆர்மீனிய இறப்புக்கள் பற்றி எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று எர்டகான் கோருகிறார். தங்களுடன் புதிய, சுமுகமான உறவுகளை அமெரிக்கா ஏற்படுத்திக்கொள்ளவேண்டுமென்றால் அதற்கேற்றபடி தங்களுடன் ஒன்றிணைந்து பணியாற்றவேண்டுமென்று அவர் குறிப்பிட்டார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *