உணவகங்களில் இரகசியமாக இரவு விருந்தில் அமைச்சர்கள்?பாரிஸ் பொலீஸ் விசாரணை.

மூடப்பட்டிருக்கின்ற உணவகங்களில் மறைவாக நடந்த இரவு விருந்துகளில் அரசாங்க “அமைச்சர்கள் சிலர்” கலந்து
கொண்டனரா?

ரகசிய விருந்துகளில் அமைச்சர்கள் சிலர் கலந்து கொண்டனர் என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாகக் காட்டும் அறிக்கை ஒன்றை பிரபல எம்6 (M6) தொலைக்காட்சி கடந்த வெள்ளியன்று
ஒளிபரப்பியது. அந்த அறிக்கையில் வெளியான தகவல்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று பாரிஸ் பொலீஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பாரிஸின் நிர்வாகப் பிரிவு ஒன்றில் மறைவிடத்தில் உள்ள உணவகத்தில் உல்லாச இரவு விருந்து நடப்பதைக் காட்டும் காட்சிகளை எம்.6 தொலைக் காட்சி அறிக்கை வெளிப்படுத்தி
உள்ளது. ரகசியக் கமெரா மூலம் பெறப்பட்டதாகக் கூறப்படுகின்ற அக் காட்சிகளில் மாஸ்க் அணியாமல், சமூக இடைவெளி இன்றி பலர் கூட்டமாகக் கலந்துகொண்டிருப்பது பதிவாகி உள்ளது. இரண்டு அல்லது மூன்று உணவகங்களில் இவ்வாறு இரகசிய இரவு விருந்துகளில் உணவு பரிமாறப்பட்டதாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தெரிவித்த சாட்சியத்தையும் தொலைக்காட்சி ஒளிபரப்பி உள்ளது.மிகவும் உயர்ந்த கட்டணத்துக்கு உணவு மற்றும் குடிவகைகள் பரிமாறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு நடந்த இரகசிய விருந்துகளில் பங்குபற்றிய அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் யார்,யார் என்ற விவரங்கள் வெளியாகவில்லை.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்து வெளியிட்ட குடியுரிமைக்கான அமைச்சர் Marlène Schiappa, “அமைச்சர்
கள், எம். பிக்கள் எவராவது சுகாதார விதிகளை மீறியிருந்தால் சாதாரண பிரஜைககளைப் போன்றே அவர்கள் மீதும் அபராதம் விதிக்கப்படும். சட்டத்துக்கு யாரும் விதிவிலக்கல்ல” என்று தெரிவித்தார். தான் அந்த உணவு விருந்தில் கலந்துகொள்ள வில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

தொலைக்காட்சியில் வெளியாகிய தகவல்களின் அடிப்படையில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு உள்துறை அமைச்சர் Gérald Darmanin பொலீஸ் தலைமையகத்துக்கு உத்தரவிட்டிருக்கிறார்.பாரிஸ் அரச சட்டவாளர் அலுவலகமும் விசாரணைகளைத் தொடக்கி உள்ளது.

குமாரதாஸன். பாரிஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *