“இப்படியான மக்கள் இருக்கிறார்கள்,” என்ற களியாட்ட நிகழ்ச்சியாளர், கலைஞர் கட்சி பல்கேரியாத் தேர்தலில் பூத்திருக்கிறது.
மக்களிடையே தனது நிகழ்ச்சிகளாலும், இசையாலும் ஸ்லாவி என்ற பெயரில் பிரபலமான ஸ்லாவி திரிபனோவ் என்ற புதிய அரசியல்வாதியின் “இப்படியான மக்கள் இருக்கிறார்கள்,” கட்சியை பல்கேரிய மக்கள் நாட்டின் அரசியல் தலைமையை நிர்ணயிக்கும் சக்தியாக்கியிருக்கிறார்கள்.
பல்கேரியாவில் நடந்த பொதுத் தேர்தலில் ஆளும் கட்சி சுமார் 25 % வாக்குகளைப் பெற்று நாட்டின் பெரிய கட்சியாகுமென்று தெரிகிறது. ஆனால் கட்சித் தலைவர் பொய்கோ பொரிஸ்ஸொவ் மீண்டும் பிரதமராக வரும் சந்தர்ப்பம் பெரும்பாலும் இல்லையெனும் அளவுக்கு பிரபல அரசியல் கட்சிகளுக்கெதிராக மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். 2009 – 2013, 2014 முதல் வரையில் பிரதமராக இருப்பவர் பொரிஸ்ஸொவ்.
சுமார் 75 விகிதத்துக்கும் அதிகமான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் ஸ்லாவியின் கட்சி 19 விகித வாக்குகளுடன் முதல் தடவையாகப் பாராளுமன்றத்தினுள் நுழையும் என்று தெரிகிறது. அதன் மூலம் அவர் நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியின் தலைவராக வரப்போகும் ஆட்சியின் பிரதமர் யாரென்பதை நிர்ணயிக்கும் பலமுள்ளவராவார் என்று தெரிகிறது. சோசலிசக் கட்சி சுமார் 14 % விகித வாக்குகளைப் பெற்றிருக்கிறது.
லஞ்ச ஊழல்கள் பல்கேரியாவின் மிகப்பெரிய பிரச்சினையாக மக்கள் உணர்கிறார்கள். அவற்றையெதிர்த்துக் கடந்த வருடத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பேரணிகளாகத் திரண்டு அரசாங்கத்துக்கெதிராகக் குரல் கொடுத்தார்கள். அவர்களுடைய குரலே நேற்று நடந்த தேர்தலில் ஒலிப்பதாகத் தெரிகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்