சீனாவின் மட்டுமல்ல இந்தியாவின் “அதிகப்படியான” கடல் பிராந்திய உரிமையுடனும் சவால் விடுகிறது அமெரிக்கா.
இந்தியாவின் அதிகப்படியான கடற்பரப்பு உரிமை கோரும் பிராந்தியத்தினுள் [exclusive economic zone] இந்தியாவின் முன்கூட்டிய அனுமதியைப் பெறாமலே தனது கடற்படைக் கப்பல் நுழைந்ததாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது. குறிப்பிட்ட இந்த “அத்துமீறலை” எதிர்த்து ராஜதந்திர நகர்வுகள் மூலமாகக் கேள்விகள் எழுப்பியிருப்பதாக இந்தியா தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
அமெரிக்கா தனது அணியிலிருக்கும் ஆதரவு நாடென்று குறிப்பிடும் இந்தியாவின் எல்லையை இப்படியான நடவடிக்கை மூலம் மீறியிருப்பது பல நாடுகளாளும் ஆச்சரியத்துடன் கவனிக்கப்படுகிறது. லட்சதீப தீவுகளையடுத்துள்ள கடலில் ஏப்ரல் ஏழாம் திகதி, ஏவுகணைகளைத் தேடி அழிக்கும் வசதிகொண்ட USS John Paul Jones போர்க்கப்பலுடன் இந்த அத்துமீறல் நடாத்தப்பட்டதுடன், சர்வதேர கடலெல்லைச் சட்டப்படி இதற்குத் தனக்கு உரிமை இருப்பதாகவும் அமெரிக்கா குறிப்பிட்டிருக்கிறது.
“குறிப்பிட்ட கடற்பரப்பையடுத்துள்ள நாட்டின் முன்கூட்டிய சம்மதமின்றி அப்படியொரு போர்ப்படையுடன் பயிற்சிகள் செய்ய எவருக்கும் உரிமையில்லை,” என்று அமெரிக்காவின் நடத்தையைக் கண்டித்திருக்கிறது இந்தியா.
ஜப்பான், இந்தியா, ஆஸ்ரேலியா ஆகிய நாடுகளுடன் அமெரிக்காவும் சேர்ந்து டிசம்பர் 2004 சுனாமி அழிவுக்குப் பின்னர் நான்கு நாட்டுக் கூட்டணியை உண்டாக்கினர். அதன் நோக்கம் அது போன்ற பேரழிவுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒன்றிணைந்து உதவுவதாகும். ஜோ பைடன் பதவியேற்றபின் அந்த நால்வரணி சர்வதேச ரீதியில் சகல நாடுகளுக்கும் கொரோனாக் காலப் பாதிப்புக்களுக்கு உதவவும் திட்டமிட்டிருக்கின்றன.
அதேபோலவே, தென் சீனக்கடலில் சீனா கோரிவரும் கடற்பிராந்திய உரிமைக்கெதிராகவும் ஒத்துழைத்து, சீனாவின் அக்கோரிக்கைகளால் பாதிக்கப்படும் நாடுகளின் பக்கம் நிற்பதற்கும் இந்த நால்வரும் திட்டமிட்டிருக்கிறார்கள். அத்திட்டத்தின் ஒரு வழி சர்வதேசக் கடற்பிராந்தியங்களில் தமது போர்க்கப்பல்களை அடிக்கடி செலுத்துவதாகும். சர்வதேச ரீதியில் சர்வதேசக் கடலென்று கருதப்படும், ஆனால், சீனா தனதென்று கோரும் தென்சீனக் கடற்பிராந்தியங்களினூடாகத் தமது போர்க்கப்பல்களைப் பாதுகாப்புடன் செலுத்திச் சீனாவுக்குச் சவால் விடுவதாகும்.
நால்வரணியின் ஒரு கூட்டணி நாட்டை அவமதிப்பது போன்ற இந்த நடவடிக்கையை அமெரிக்கா ஏன் எடுத்தது என்பது பற்றிய பல விமர்சனங்களும் எழுப்பப்படுகின்றன. ஒருவேளை சமீப காலத்தில் இதேபோன்ற நடவடிக்கைகளைத் தென்சீனக் கடற்பரப்பில் அமெரிக்கா செய்துவருவதால் அதை நியாயப்படுத்த இதைச் செய்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்