என்றுமில்லாத அளவில் ஸ்பெய்னில் வெளிநாட்டவர்கள் தொகை 2020 இல் அதிகரித்திருக்கிறது.
2020 வருடக் கடைசியில் ஸ்பெயினில் வாழும் வெளிநாட்டவர்கள் தொகை 5.8 மில்லியன் ஆகும். கொரோனாத்தொற்றுக்கள், அதற்கான கட்டுப்பாடுகள் இருந்தும் 2019 ஐ விட 137,120 பேர் அதிகமாக அந்த நாட்டில் 2020 இல் குடியேறியிருக்கிறார்கள் என்பதை ஸ்பெயினின் குடிவரவுத் தரவுகளிலிருந்து காணமுடிகிறது. ஸ்பெய்னின் சரித்திரத்திலேயே வெளிநாட்டவர்கள் இத்தனை அதிகமாக வாழ்வது 2020 இல் தான்.
ஸ்பெய்னில் குடியேறியிருக்கும் வெளிநாட்டவர்களில் 61 விகிதமானோர் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களேயாகும். ஒரு மில்லியன் ருமேனியர்களும், 350,981 இத்தாலியர்களும் ஸ்பெய்னில் குடியேறியிருக்கிறார்கள். தொடர்ந்தும் மூன்றாவது பெரிய வெளிநாட்டவர்களாக பிரிட்டிஷ்காரர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய தொகை 381,448 ஆகும். ருமேனியர்களும், மொரொக்கர்களும் முதலிரண்டு அதிக வெளிநாட்டவர்களாகும்.
கத்தலோனியா, மாட்ரிட், அண்டலூசியா, வாலென்சியா ஆகிய ஸ்பெய்னின் நான்கு சுயாட்சி மாநிலங்களிலேயே பெரும்பாலான வெளிநாட்டவர்கள் குடியேறியிருக்கிறார்கள்.
கடந்த வருடத்தில் ஸ்பெய்னில் மிக அதிகமாகியிருப்பவர்கள் வெனிசூலாவைச் சேர்ந்தவர்களாகும். அவர்களுடைய வரவு 53 % ஆல் அதிகமாகியிருக்கிறது. வெனிசுவேலாவில் சமீப வருடங்களில் ஏற்பட்டிருக்கும் அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளால் அவர்களின் குடியேற்றம் அதிகமாகி 152,017 பேர் ஸ்பெய்னில் வாழ்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்